எண்ணங்களை பற்றி
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே" - திருமூலர்
மனிதன் என்னும் சொல்லுக்கு நினைப்பவன் என்பது பொருள். மனித மனம் என்பது எண்ணங்களைத் தோற்றுவிக்கும் ஆற்றல் வாய்ந்த அகக்கருவி ஆகும். அகக்கருவி என்பதை வடமொழியில் அந்தக்கரணம் என்பர். அகக்கருவிகள் நான்கு என்றும் அவை மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பன என்றும் வழங்குவர் அறிஞர்.
அகக்கருவிகளுள் மனம் என்பது எண்ணங்களைத் தோற்றுவிப்பது: புத்தி என்பது அறிதலுக்கு உரியது, சித்தம் என்பது மீண்டும் மீண்டும் எண்ணங்களை மனத்திக்கு கொண்டு வருவது: அகங்காரம் என்பது எண்ணங்களை வன்மையும் திண்மையும் அடையச் செய்வது.
மனம் தூய்மைபெற்றால் எண்ணங்கள் தூய்மைஉறும். எண்ணங்கள் தூய்மைஉறின் சொல், செயல் எல்லாம் தூய்மைஉறும். அதுவே அறவாழ்வின் அடிப்படை. எனவேதான் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
"மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற"
என்று பாடி அருளினார்.
இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற தமிழ்ப் பெருங்கவிஞன் வரகவி பாரதி அன்னை முத்துமாரியை நோக்கி,
"துணி வெளுக்க மண்ணுண்டு
தோல் வெளுக்க சாம்பருண்டு
மணி வெளுக்க சாணையுண்டு
ஆனால் மனம் வெளுக்க வழி என்ன? "
என்று வேண்டுகிறான்.
மனம் வெளுக்க - எண்ணங்கள் தூய்மை பெற என்ன வழி? வழி காணும் முயற்சியில் வான்புகழ் வள்ளுவம் துணையுண்டு -உள்ள எழுச்சியையும் இன்ப நெகிழ்ச்சியையும் தரவல்ல நம் இலக்கியங்கள் ஊன்றுகோல்களாய் நின்று உற்றுழி உதவி-துணிவுடன் பணி மேற்கொள்வோம்.
www.ennangal.com
Copyright © 2019 www.ennangal.com - All Rights Reserved.
Powered by GoDaddy Website Builde